பிரமாண்டமாக தொடங்கிய 15-வது தி.மு.க. பொதுக்குழு கூட்டம் - அமைச்சர்கள் வருகை


பிரமாண்டமாக தொடங்கிய 15-வது தி.மு.க. பொதுக்குழு கூட்டம் -  அமைச்சர்கள் வருகை
x
தினத்தந்தி 9 Oct 2022 3:41 AM GMT (Updated: 9 Oct 2022 3:44 AM GMT)

தி.மு.க தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட நிலையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

சென்னை:


திமுகவின் 15-வது உட்கட்சிப் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்று, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

மேலும் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் திமுக தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றித் தேர்வாகியுள்ளார். அதேபோல, பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில், திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் திமுக தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர். தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுக்குழு தனக்கு வழங்கும் சிறப்பு அதிகாரம், உரிமையின் அடிப்படையில், திமுக துணைப் பொதுச் செயலாளர்களை நியமனம் செய்து, அறிவிப்பார். 4 தணிக்கை குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வழக்கமாக சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். ஆனால் இந்த முறை வெளியே நடைபெறுவதால் அதன் அடையாளம் மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பொதுக்குழு கூட்டத்துக்கு கலைஞர் அரங்கம் போன்று தத்துருவமாக 'செட்' அமைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு சைவ-அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2 தனித்தனி சாப்பாடு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.


Next Story