நினைத்த காரியம் கைகூடும் என்ற நம்பிக்கை... வேப்ப மரத்தில் பல்லியை பார்க்க அலைமோதும் கூட்டம்


நினைத்த காரியம் கைகூடும் என்ற நம்பிக்கை... வேப்ப மரத்தில் பல்லியை பார்க்க அலைமோதும் கூட்டம்
x

பக்தர்கள் மரத்தில் பல்லியை பார்த்துவிட்டால் தாங்கள் நினைத்த காரியம் கைகூடும் என வெகுவாக நம்புகின்றனர்.

தஞ்சாவூர்,

இந்து மதத்தில் பல்லியை தெய்வமாக வழிபட்டு வரும் வழக்கம் உள்ளது. ஆன்மிகத்துக்கும், பல்லிக்கும் தொடர்பு இருப்பதாக இன்றளவும் பக்தர்கள் நம்புகின்றனர். வீடுகளில் பல்லிகள் இருந்தால் அதிர்ஷ்டம் என்கின்றனர். பூஜை அறைகளில் பல்லிகள் தென்பட்டால் அந்த வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும், மகிழ்ச்சி அதிகரிக்கும் என பொதுமக்கள் நம்புகின்றனர்.

இவ்வாறு இந்து மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து இருக்கும் பல்லி, இப்போது தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர தொடங்கி உள்ளது.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கருவூரார் சன்னதியின் பின்புறம் ஒரு வேப்பமரம் உள்ளது. கருவூரார் சன்னதியை சுற்றி வலம் வரும் பக்தர்கள் மரத்தில் பல்லி இருக்கிறதா? என மேல்நோக்கி பார்த்தபடி நின்று விடுகின்றனர். மரத்தில் பல்லியை பார்த்துவிட்டால் தாங்கள் நினைத்த காரியம் கைகூடும் என வெகுவாக நம்புகின்றனர்.

இதனால் நாளுக்கு நாள் மரத்தில் உள்ள பல்லியை பார்க்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஒருவர் மரத்தில் பல்லியை தேடுவதை பார்த்து பக்தர்கள் கூட்டமாக மாறி விடுகின்றனர். இவர்களின் தேடலை பார்த்து தஞ்சை பெரிய கோவிலுக்கு சுற்றுலா வரும் பயணிகளும் அவர்களுடன் இணைந்து பல்லியை பார்த்திட ஆர்வம் காட்டுகின்றனர்.

மரத்தில் கருவூரார் பல்லியாக காட்சி அளிப்பதாகவும் ஒரு சில பக்தர்கள் கூறுகின்றனர். மரப்பட்டையின் நிறத்திலேயே பல்லிகள் இருப்பதால் நீண்ட நேரமாக நின்று பல்லியை தேடுகின்றனர். ஒருசிலர் தேடிப்பார்த்தும் பல்லி தென்படாததால் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.


Next Story