புளியந்தோப்பு அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு


புளியந்தோப்பு அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு
x

சென்னை புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி மகப்பேறு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை

சென்னை புளியந்தோப்பு ஆடுதொட்டி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 34). இவரது மனைவி நர்மதா (33). விஜயகுமார் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் நர்மதாவுக்கு புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி மகப்பேறு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், நேற்று காலை நர்மதாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டு அதிக அளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை உறவினர்கள் புளியந்தோப்பில் உள்ள மகப்பேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ரத்தப்போக்கு குறையவில்லை. இதையடுத்து, மாலை 4 மணியளவில் மேல் சிகிச்சைக்காக அவரை எழும்பூர் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, அவரை டாக்டர்கள் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர் சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அப்பெண் இறந்ததற்கு புளியந்தோப்பு ஆஸ்பத்திரியில் முறையாக சிகிச்சை அளிக்காததே காரணம் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, கணவர் விஜயகுமார் கூறியதாவது:-

இன்று (நேற்று) காலை 10.30 மணியளவில் புளியந்தோப்பில் உள்ள ஜி-3 மாநகராட்சி மகப்பேறு ஆஸ்பத்திரியில் நர்மதாவை அனுமதித்தோம். அங்கு டாக்டர்கள் யாருமே இல்லை. நேரம் செல்ல செல்ல எனது மனைவிக்கு தீவிர ரத்தப் போக்கு ஏற்பட்டு கவலைக்கிடமாக இருந்தார். அவருக்கு அங்கிருந்த நர்சுகளே சிகிச்சை அளித்தனர். நிலைமை மிகவும் மோசமடைந்த நிலையில் மதியம் 2.30 மணிக்கு தான் டாக்டர்கள் வந்தனர். இதற்கிடையில் சரியாக சிகிச்சை அளிக்காததால் எனது மனைவியை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தோம். அப்போது, அங்கிருந்த டாக்டர்கள் எனது மனைவியை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

அப்போதே அவரது நிலை மிகவும் மோசமாக இருந்தது. எழும்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதித்த பின்னர் நர்மதா இறந்ததுவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனது மனைவியின் உயிரிழப்புக்கு புளியந்தோப்பு மகப்பேறு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டதே காரணம். எனவே, டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய விசாரணை நடத்த வேண்டும். எனது மனைவி உயிரிழப்புக்கு காரணம் என்னவென்று தெரிய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்.

ஏற்கனவே, இதே புளியந்தோப்பில் உள்ள மகப்பேறு ஆஸ்பத்திரியில் பெண் ஒருவர் சிகிச்சை சரிவர அளிக்காததால் உயிரிழந்தார். மீண்டும், இதுபோன்ற சம்பவம் நடக்காமல் மருத்துவத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story