வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்-ஓசூரில், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு


வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்-ஓசூரில், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு
x

வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றி 100 சதவீதம் வெற்றிபெறும் என்று ஓசூரில் நடந்த விழாவில், தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றி 100 சதவீதம் வெற்றிபெறும் என்று ஓசூரில் நடந்த விழாவில், தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.

பொற்கிழி வழங்கும் விழா

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், கட்சியின் இளைஞரணி மாநில செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். முன்னதாக, ஓசூர் சீதாராம்நகரில் கட்சிக்கொடியேற்றி வைத்த அவர், தொடர்ந்து ரிங்ரோடு பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கட்சியில் நலிவுற்ற 600 முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.

இந்த விழாவிற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர பொறுப்பாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா வரவேற்றார்.

40 தொகுதிகளிலும் வெற்றி

நலிவுற்ற கட்சி முன்னோடிகளுக்கு, பொற்கிழி வழங்கி உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசியதாவது:- கட்சி நிர்வாகிகள் என்னை எந்த விழாவிற்கு அழைத்தாலும் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள, கட்சிக்காக உழைத்த நலிவுற்ற மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கவுரவப்படுத்த வேண்டும், அப்போது தான் நான் விழாவிற்கு தேதி கொடுப்பேன் என்று கூறி வருகிறேன்.

நான் கருணாநிதியை பார்த்துள்ளேன். பெரியார், அண்ணாவை பார்த்ததில்லை. ஆனால் அவர்களின் மறு உருவமாக, கட்சியின் மூத்த முன்னோடிகளை பார்த்து வருகிறேன். நீங்கள் எங்களை வழி நடத்தி செல்லுங்கள். உங்கள் பாதையில் நாங்கள் பயணம் செய்கிறோம்.

அடுத்தடுத்து வரும் தேர்தல்களில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், தி.மு.க. வெற்றி பெற வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றி 100 சதவீதம் வெற்றிபெறும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 24 மணி நேரமும், தமிழக மக்களின் நலனுக்காக சிந்தித்து ஓயாது உழைத்து வருகிறார்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.

இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் ஆர்.காந்தி, சி.வி.கணேசன் ஆகியோர் பேசினார்கள். மேலும் பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், வேப்பனப்பள்ளி முன்னாள் எம்.எல்.ஏ.பி.முருகன், மேற்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் யுவராஜ், ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாச ரெட்டி, மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், பூனப்பள்ளி ஊராட்சி செயலாளர் மஞ்சுநாதப்பா, டாண்டா தலைவர் எடப்பள்ளி பிரகாஷ், ராமச்சந்திரன், வித்யாசாகர், நாராயணப்பா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராமு, வேணு, அசோக், கிருஷ்ணன் முருகேசன், முன்னாள் எம்.பி. சுகவனம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

மாற்றுக்கட்சியினர் இணைந்தனர்

பின்னர் ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா, அதைத்தொடர்ந்து வரம் மருத்துவமனை திறப்பு விழா மற்றும் தேன்கனிக்கோட்டையில் தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாச ரெட்டி இல்லத்திருமண வரவேற்பு விழா ஓசூரில், மாநகராட்சி கவுன்சிலர் என்.எஸ்.மாதேஸ்வரன் இல்ல திருமண வரவேற்பு விழா, ஆகிய நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.


Next Story