அதிகபட்சமாக மாம்பழத்துறையாறில் 170 மி.மீ. பதிவு: குமரியில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை


அதிகபட்சமாக மாம்பழத்துறையாறில் 170 மி.மீ. பதிவு: குமரியில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 16 Oct 2023 12:15 AM IST (Updated: 16 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் விடிய, விடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக மாம்பழத்துறையாறில் 170 மி.மீ. மழை பதிவானது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

கொட்டி தீர்த்த கனமழை

குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்தது. இதில் நேற்று முன்தினம் இரவு மலை பகுதி, அணை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

விடிய, விடிய பெய்ததால் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முன்சிறை, திக்குறிச்சி, அழிக்கால், களியல் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மழையின் காரணமாக களியல்-அருமனை சாலை, கடையாலுமூடு-ஆறுகாணி சாலை, மோதிரமலை-குற்றியாறு சாலை, குலசேகரம்-திற்பரப்பு சாலை உள்ளிட்ட சாலைகளில் உள்ள தரைப்பாலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1487 கனஅடி தண்ணீர் வந்தது. இதே போல பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 723 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 1,158 கனஅடி தண்ணீரும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 618 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 63 கனஅடி தண்ணீரும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீரும் வந்தது.

குறிப்பாக சிற்றார் 1 அணைக்கு அதிகப்படியான தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அதாவது 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 15.38 அடியாக இருந்தது. அது நேற்று 16.76 அடியானது. ஒரே நாளில் அணை நீர்மட்டம் 1.38 அடி உயர்ந்துள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்ததால், சிற்றார் 1 அணையில் இருந்து உபரி நீா் திறக்கப்பட்டது.

கால்வாய்களில்வெள்ளப்பெருக்கு

இதே போல 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 37 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 65.35 அடியாகவும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 2 அணையின் நீர்மட்டம் 16.86 அடியாகவும், 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 43.14 அடியாகவும் உள்ளது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 2707 கனஅடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும் பாசன கால்வாய்களில் திறக்கப்பட்டு உள்ளது.

இதனால் கால்வாய்களில் அதிகளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பழையாற்று கால்வாய், தோவாளை கால்வாய், அனந்தனார் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் அதிகளவில் தண்ணீர் ஓடுகிறது.

மழை அளவு

நேற்று காலையிலும் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் மழை பெய்தது. அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மாம்பழத்துறையாறு அணை பகுதியில் 170 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு மி.மீ. வருமாறு:-

பூதப்பாண்டி-8.6, சிற்றார் 1-128.4, களியல்-159.8, கன்னிமார்-29.8, கொட்டாரம்-31.6, குழித்துறை-151.4, மயிலாடி-78.2, நாகர்கோவில்-60.2, பேச்சிப்பாறை-89.6, பெருஞ்சாணி-25.6, புத்தன்அணை-25, சிற்றார் 2-118.2, சுருளகோடு-38.2, தக்கலை-103, குளச்சல்-44.6, இரணியல்-52.4, பாலமோர்-52.4, திற்பரப்பு-144, ஆரல்வாய்மொழி-14.4, கோழிப்போர்விளை-142.8, அடையாமடை-62, குருந்தன்கோடு-104, முள்ளங்கினாவிளை-162.4, ஆனைகிடங்கு-167.4, முக்கடல்-15.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

அருவியில் வெள்ளப்பெருக்கு

சிற்றாறு-1 அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று காலை 6 மணிக்கு வினாடிக்கு 537 கன நீர் வெளியேற்றப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் வினாடிக்கு 1,067 கனஅடியாக உபரிநீர் திறக்கப்பட்டது.

இந்த நீரும் கோதையாற்றில் கலந்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியே தெரியாத அளவுக்கு தண்ணீர் விழுந்தது. இதனால் 4-வது நாளாக நேற்றும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வந்திருந்தனர். குளிக்க அனுமதிக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story