மகா லிங்கேஸ்வரர் கோவிலை கிராம மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்


மகா லிங்கேஸ்வரர் கோவிலை கிராம மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Oct 2023 8:30 PM GMT (Updated: 8 Oct 2023 8:30 PM GMT)

ஊட்டி அருகே அரசு கையகப்படுத்திய மகா லிங்கேஸ்வரர் கோவிலை கிராம மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கூறினார்.

நீலகிரி

ஊட்டி அருகே அரசு கையகப்படுத்திய மகா லிங்கேஸ்வரர் கோவிலை கிராம மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கூறினார்.

மகாலிங்கேஸ்வரர் கோவில்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே குந்தசப்பை கிராமத்தில் மகா லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுற்றுவட்டார 13 கிராம மக்கள் வழிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, தக்கார் நியமனம் செய்யப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தக்கார் பதவி ஏற்கவில்லை. தற்போது அறங்காவலர் நியமனம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் மகா லிங்கேஸ்வரர் கோவிலுக்கு தக்கார் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து கோவிலை விடுவிக்க வலியுறுத்தியும் 13 கிராம மக்கள் கோவில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பஜனை பாடி எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒப்படைக்க வேண்டும்

இந்தநிலையில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி ஓய்வு பெற்ற பொன்மாணிக்கவேல் போராட்டத்தில் கலந்துகொண்டு கிராம மக்கள் மத்தியில் பேசும்போது, படுகர் இன மக்கள் வழிபட்டு வரும் மகா லிங்கேஸ்வரர் கோவிலை அறநிலையத்துறை எடுக்க அனுமதிக்கக்கூடாது. அதற்கு அனைவரும் ஒற்றுமையாக போராட வேண்டும். போலீசார் கிராம மக்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்தால் அதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மகா லிங்கேஸ்வரர் கோவிலுக்கு தக்கார் நியமனம் செய்த உதவி ஆணையாளர் மீது போலீஸ் நிலையத்தில் மனு கொடுக்க உள்ளோம். மேலும் இதற்கு காரணமானவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். நீலகிரியில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் நாங்கள் பாதுகாப்பு கொடுக்க உள்ளோம். அறநிலைத்துறை கையகப்படுத்திய மகா லிங்கேஸ்வரர் கோவிலை கிராம மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கோர்ட்டு உத்தரவு

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் (ஊட்டி) ஹேமலதா கூறுகையில், இந்த கோவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு தக்கார் நியமனம் நடைபெற்றது. இதற்கிடையே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர் நியமனம் செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, தற்போது இந்த கோவிலிலும் அறங்காவலர் நியமனம் செய்வதற்காக அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அறங்காவலர் அந்த கிராமத்தை சேர்ந்த உள்ளூர் நிர்வாகியாக இருக்கலாம். ஒருவேளை இதற்கும் கிராம மக்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் கடிதம் எழுதி கொடுத்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, கோர்ட்டு வழிமுறைகளை பின்பற்றி கொள்ளலாம் என்றார்.


Next Story