மனைவி, மகளை அரிவாள்மனையால் வெட்டியவர் கைது
மனைவி, மகளை அரிவாள்மனையால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
காதல் திருமணம்
திருச்சி ஏர்போர்ட் காந்திநகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி கோமதி (40). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஸ்ரீவர்த்தினி(17) உள்பட 3 குழந்தைகள் உள்ளனர். கோமதி கே.கே.நகர் பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
சுரேசுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில் ேகாமதியின் தங்கை வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோமதியும், ஸ்ரீவர்த்தினியும் சென்று வந்துள்ளனர். இதையறிந்த சுரேஷ், அவர்களிடம் இது பற்றி கேட்டபோது, தகராறு ஏற்பட்டுள்ளது.
அரிவாள்மனை வெட்டு
அப்போது, சுரேஷ் தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், வீட்டில் இருந்த அரிவாள்மனையால் அவரை வெட்டியதாக தெரிகிறது. இதைப்பார்த்த ஸ்ரீவர்த்தினி(17) தனது தந்தையை தடுக்க முயன்றார். அப்போது, அவருடைய இடதுகை பெருவிரல் மற்றும் முகத்தில் அரிவாள் மனையால் வெட்டு விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேசை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.