திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது - வாலிபரை கொன்று உடலை வீசியது விசாரணையில் அம்பலம்
திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். அவர் வாலிபரை கொன்று உடலை வீசியது விசாரணையில் அம்பலம் ஆனது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தின் பேட்டரி திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பொன்னேரி அடுத்த திருப்பாலைவனத்தை சேர்ந்த கெல்லீஸ் என்ற விஜி (வயது20) என்பவரை நேற்று கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் 25 நாட்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சின்ன ஒபுளாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் பிளைவுட் தொழிற்சாலையின் பின்புற மதில் சுவரையொட்டி 35 வயது கொண்ட ஆண் ஒருவரை கொன்று வீசியதாக தெரிவித்தார்.
போலீசார் விசாரணையில் தன்னை தாக்கிய ஒருவரை கடந்த 25 நாட்களுக்கு முன்பு விஜி அடையாளம் கண்டு உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் மேற்கண்ட இடத்திற்கு அந்த நபரை அழைத்து சென்று மது போதையில் சுவரில் தலையை இடித்து கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு கிராம நிர்வாக அதிகாரி ரமேஷிடம், அழுகிய நிலையில் கிடந்த ஆண் பிணம் குறித்து நேரில் விசாரணை நடத்தி கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் புகார் மனு ஒன்றை பெற்றனர். இதனையடுத்து பேட்டரி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கெல்லீஸ் கோர்ட்டில் ஆஜார்படுத்தி பின்னர் போலீஸ் காவலில் எடுத்து முழுமையாக விஜியை விசாரணை நடத்திட கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
அப்போது தான் கொலை செய்யப்பட்டவர் யார்? ஏதற்காக கொலை நடந்தது? இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என்பது போன்ற பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என போலீசார் கருதுகின்றனர்.