ஜாமீனில் வெளியே வந்தவர் ஓட, ஓட விரட்டி படுகொலை
சிவகிரி அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் கோர்ட்டில் ஆஜராக சென்றபோது ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் செல்வகுமார் (வயது 40). இவரை ஒரு கொலை தொடர்பாக போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 11-ந் தேதி செல்வகுமார் ஜாமீனில் வெளியே வந்தார்.
நேற்று மதியம் 12 மணியளவில் செல்வகுமார் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக சிவகிரி கோர்ட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி அருேக சென்றபோது, மர்மகும்பல் ஒன்று மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. அந்த கும்பலை பார்த்ததும் செல்வகுமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.
ஆஸ்பத்திரி பின்பக்க காம்பவுண்டு சுவரை தாண்டி அங்குள்ள வயல் பகுதி வழியாக ஓடிய அவரை மர்ம கும்பல் விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் செல்வகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ், சிவகிரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சஜீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். செல்வகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவிப்பட்டணத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரை செல்வகுமார் கொலை ெசய்தார். இந்த வழக்கு தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது, ஜாமீனில் வெளியே வந்த செல்வகுமாரை, சிவக்குமாரின் நண்பர்கள் பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். ஜாமீனில் வெளியே வந்தவர் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.