மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:47 PM GMT)

ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

ஆற்றூர் பேரூராட்சிக்கு சொந்தமான மூவாற்றுமுகம்-வள்ளங்குழி சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி நேற்று காலையில் வள்ளங்குழி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் ஆற்றூர் பேரூராட்சி அலுவலகம் முன் திரண்டனர். பின்னர் அவர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு முன்னாள் கவுன்சிலர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், திருவட்டார் வட்டார செயலாளர் வில்சன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சகாய ஆன்றனி, ரெவி மற்றும் ஸ்டீபன், மனோகரன், விஜி உள்பட பெண்கள் பலர் கலந்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் குடிநீர் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணிகள் முடிந்ததும் சாலையை சீரமைப்பதாக ஆற்றூர் பேரூராட்சி தலைவர் பீனா அமிர்தராஜ், செயல் அலுவலர் மகேஸ்வரன் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story