மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2023 1:00 AM IST (Updated: 8 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 445 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 445 பேர் கைது செய்யப்பட்டனர்.

மறியல் போராட்டம்

இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் பெரியசாமி, லெனின் முருகன், சக்தி, வட்டக்குழு உறுப்பினர்கள் மாது, ராமசாமி, ஜெய்சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரியில் 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

சூளகிரி

சூளகிரியில் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. சூளகிரியில் உள்ள இந்தியன் வங்கி அருகே நடந்த போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் முனியப்பா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி, போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் 25 பெண்கள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் பேரிகை சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் நடைபெற்றது. மாநில குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு தலைமையில் நடந்த மறியலில் ஒன்றிய செயலாளர்கள் ராஜா, வெங்கடேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், சாம்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் சீனிவாஸ், அனுமப்பா, சந்திரசேகர் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டம் செய்து மறியல் செய்தனர்.

மறியல் செய்த 105 பேரை தேன்கனிக்கோட்டை இன்ஸ்ெபக்டா் நாகராஜ் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தார்.

ஓசூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒசூர் எம்.ஜி. ரோட்டில் காந்தி சிலை அருகே நடந்த மறியல் போராட்டத்திற்கு மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர், மறியலில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலையில் அமர்ந்தும், படுத்து உருண்டும் போராட்டம் செய்தனர். அப்போது, அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று பஸ்சில் ஏற்றினர். மேலும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 85 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் ஓசூர் ரெயில்நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

445 பேர் கைது

இதே போல் அஞ்செட்டி, சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி என மாவட்டத்தில் மொத்தம் 8 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 445 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story