தனியாரிடமிருந்து தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


தனியாரிடமிருந்து தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

கோப்புப்படம் 

தனியாரிடமிருந்து தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய அளவிலான மின்சார சந்தையிலிருந்தும், தனியார் மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்தும் தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு கட்டணம் மற்றும் வரியாக ஏற்கனவே வசூலிக்கப்படும் ரூ.1.96 காசுகளுடன் கூடுதல் வரியாக 34 காசுகள் சேர்த்து வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்திடம் மின்சார வாரியம் விண்ணப்பித்திருக்கிறது. மின்சார வாரியத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது; எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது ஆகும்.

தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள், துணி ஆலைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரத் தேவையை தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மட்டுமே தீர்க்க முடியாது. அதனால், தனியாரிடமிருந்தும், வெளிச்சந்தையில் இருந்தும் மின்சாரத்தை வாங்குகின்றன. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வாங்கப்படும் மின்சாரத்தை தங்கள் ஆலைக்கு கொண்டு வருவதற்காக மின்சார வாரியத்திற்கு சொந்தமான மின் தடத்தை பயன்படுத்துகின்றன. அதற்கான கட்டணம் மற்றும் வரியாக யூனிட்டுக்கு ரூ.1.94 செலுத்தப்படுகிறது. இதுவே அதிகம் என்று தொழில்துறையினரால் கூறப்படும் நிலையில், இப்போது கூடுதல் வரியை விதிப்பது நியாயமல்ல.

தமிழ்நாட்டில் கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனால், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.31,500 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கிறது. அதேநேரத்தில் அளவுக்கு அதிகமான மின்சாரக் கட்டண உயர்வால் ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. யூனிட்டுக்கு 34 காசு கூடுதல் வரி விதிக்கப்பட்டால் மீதமுள்ள பெருந்தொழில் நிறுவனங்களும் மூடப்படும் நிலை ஏற்படும். இதைத் தான் தமிழக அரசு விரும்புகிறதா? என்று தெரியவில்லை.

2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வால் மட்டும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 7 மாதங்களில் ரூ.23,863.29 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. ஆனாலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது. மின்சாரக் கொள்முதல் செலவு அதிகரித்திருப்பது, மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் ஆகியவைதான் இழப்புக்கான முதன்மைக் காரணம் என்று கூறப்படும் நிலையில், அதை சரி செய்யாமல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது, தனியாரிடம் வாங்கும் மின்சாரத்திற்கும் கூடுதல் வரி விதிப்பது என தொழில் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தாக்குதல்களை தமிழக அரசு தொடுப்பது கண்டிக்கத்தக்கது.

வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்ற பேராசையில் மின்சாரக் கட்டணத்தையும், வரிகளையும் உயர்த்துவது பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு ஒப்பானதாகிவிடும். எனவே, தனியாரிடமிருந்து தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story