காஞ்சீபுரத்தில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது

காஞ்சீபுரத்தில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம் நகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பு, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். கடந்த 2017-ம் ஆண்டு கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரது கார் டிரைவர் தினேஷ்குமார் மீது 5 கொலை வழக்குகள் உள்பட சுமார் 46 வழக்குகளும், ஸ்ரீதரின் மற்றொரு நண்பரான தியாகு மீது 8 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகள் உள்பட சுமார் 51 வழக்குகளும் உள்ளன.
ஒரு கட்டத்தில் தினேஷ் குமார் மற்றும் தியாகு இருவரும் தனி கோஷ்டிகளாக பிரிந்து கொண்டு, தங்களில் யார் அடுத்த தாதா என்ற போட்டியில் பல கொலைகளை செய்துள்ளனர்.
இதையடுத்து காஞ்சீபுரம் நகரத்தில் கொலைகளை தடுப்பதற்கான போலீஸ் துறை சிறப்பு தனிப்படைகள் அமைத்து இருவரையும் கைது செய்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்தனர்.
இதையடுத்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி தினேஷ்குமார் திடீரென்று தலைமறைவானார்.
இந்த நிலையில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரவுடிகளை ஒழிப்பதற்காக சிறப்பு அதிகாரியாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து பழைய ரவுடிகள் மற்றும் புதிய ரவுடிகள் ஆகியோரை கைது செய்ய தனிப்படையினர் தீவிரமாக முயற்சித்து வந்தனர்.
இந்த நிலையில் ஸ்ரீதரின் கார் டிரைவராக இருந்த பிரபல ரவுடி தினேஷ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். தொடர்ந்து சிறையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஜாமீனில் வெளிவந்த நிலையில், பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலையத்தில் தினேஷ் மீது 4-க்கும் மேற்பட்ட வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகமல் இருந்து வந்தார்.
இதையடுத்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் தினேஷ்க்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தினேஷை போலீசார் வலைவீசி தேடிவந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகருக்கு நேற்று மாலை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குற்றவாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கீழம்பி சந்திப்பு பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த தினேஷை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.






