சாகசம் செய்ய முயன்ற போது மாணவியின் முகத்தில் தீப்பற்றியது
குன்னூர் அருகே நவராத்திரி விழாவில் சாகசம் செய்ய முயன்ற மாணவியின் முகத்தில் தீப்பற்றியது. அவர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
குன்னூர் அருகே நவராத்திரி விழாவில் சாகசம் செய்ய முயன்ற மாணவியின் முகத்தில் தீப்பற்றியது. அவர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நவராத்திரி விழா
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே எடப்பள்ளி கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. இதையொட்டி வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதில் துர்க்கை, விநாயகர் உள்பட பல்வேறு சாமி சிலைகள் இடம் பெற்று இருந்தன. பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
சாகசம் செய்ய முயற்சி
விழாவையொட்டி அங்கு ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை, கலை நிகழ்ச்சிக்கு என தனித்தனியே மேடைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
அதில் ஒன்றான கலைநிகழ்ச்சி மேடையில், மாணவிகள் சாமி வேடமிட்டு மகிஷாசுர வதம், கேரள கதகளி, ராஜஸ்தானி கூமர், குஜராத்தி கர்பா ஆகிய நடன நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.
அப்போது ஒரு மாணவி, வாயில் மண் எண்ணெயை ஊற்றி, அதை கையில் வைத்திருந்த பந்தத்தில் ஊதி சாகசம் செய்ய முயன்றார்.
தீவிர சிகிச்சை
ஆனால் எதிர்பாராதவிதமாக அவரது முகத்தில் தீப்பற்றியது. தொடர்ந்து மள மளவென பரவிய தீ தலை முழுவதும் பரவ தொடங்கியது. இதை மேடையின் கீழ் அமர்ந்து இருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஓடிச்சென்று தீயை அணைத்து, படுகாயம் அடைந்து இருந்த மாணவியை மீட்டனர்.தொடர்ந்து அந்த மாணவியை அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.