பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்
மின் தடையால் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்த பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள் துணைத்தேர்வு எழுத கடந்த 27-ந் தேதி முதல் நேற்று வரை தாங்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என்றும், அவ்வாறு விண்ணப்பிக்காதவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 7-ந் தேதி வரை கூடுதல் கட்டணம் செலுத்தி தக்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்க நேற்று பள்ளிக்கு வந்தனர். ஆனால் நேற்று மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் பள்ளிக்கு வந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் வெகுநேரம் காத்திருந்தனர். மாலை 4 மணியை கடந்தும் மின்சார வினியோகம் செய்யப்படாததால் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் பள்ளியின் முன்பு திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 4.30 மணிக்கு பிறகு மின் இணைப்பு சரிசெய்யப்பட்டதால் மாணவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு விண்ணப்பிக்கும் பணி நடந்தது. மாணவர்களின் இந்த போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.