மத்திய அரசு அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது - மத்திய இணை மந்திரி எல்.முருகன்


மத்திய அரசு அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
x

கோப்புப்படம்

மத்திய அரசு அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மத்திகிரியில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பண்ணையை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல். முருகன் நேற்று நேரில் பார்வையிட்டார். பண்ணையில் உள்ள கால்நடைகள், அதற்கான உணவுப் பயிர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் ஆகியவை குறித்து கேட்டறிந்த அவர், பின்னர் காங்கேயம் வகை உள்ளிட்ட உயர் வகை காளைகள் வளர்க்கும் மையத்தை பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை மந்திரி எல். முருகன் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அரசின் நலத் திட்டங்கள் இடைத் தரகர்கள் இன்றி மக்களை சென்று சேர்ந்துள்ளன.

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ஜன் தன் வங்கிக் கணக்கு, விவசாயிகள் கெளரவ நிதி, இலவச எரிவாயு இணைப்பு, சுகாதாரமான குடிநீர், கழிப்பிடங்கள், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டில் கப்பல் போக்குவரத்து, விண்வெளி என அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

2014 -ம் ஆண்டுக்குப் பிறகுதான் மீன் வளத்துறைக்கென்று தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ரூ. 32 ஆயிரம் கோடி இந்தத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை காசிமேடு துறைமுகத்தை உலக அளவில் நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. வல்லமை மிக்க திட்டத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story