அய்யலூரில் அரசு பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்


அய்யலூரில் அரசு பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்
x

அய்யலூரில் அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

வேடசந்தூரில் இருந்து அய்யலூர் வழியாக எஸ்.பூசாரிபட்டிக்கு காலை மற்றும் மாலை என 2 வேளைகளில் அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. எஸ்.பூசாரிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இந்த பஸ்சில் ஏறி, அய்யலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கல்வி பயில செல்கின்றனர். அதுமட்டுமின்றி கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் அதிக அளவில் இந்த பஸ்சில் பயணம் செய்கின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அந்த அரசு பஸ் மாலை நேரத்தில் பூசாரிபட்டிக்கு வராமல், அய்யலூரிலேயே திரும்பி செல்வதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் பெரிதும் சிரமம் அடைந்தனர். பஸ் சரிவர வராததால் பஸ்பாஸ் வைத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆட்டோ, வேனில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த எஸ்.பூசாரிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று அய்யலூருக்கு வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி, அரசு பஸ்சை முறையாக இயக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் பஸ்சை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அய்யலூரில், திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story