திருப்போரூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் சாவு


திருப்போரூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் சாவு
x

திருப்போரூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அச்சரவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 75). இவர், கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை செம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்.

இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ராமு உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கணவர் இறந்த துக்கத்தை தாங்காமல் ராமுவின் மனைவி தங்கமணி (65) தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். திடீரென நெஞ்சை பிடித்தபடி கீழே விழுந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் தங்கமணியை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று காலை தங்கமணியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து அவரது உடலும் செம்பாக்கம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் இறந்த தகவல் அறிந்து செம்பாக்கம் கிராமமே சோகத்தில் மூழ்கியது. கிராம மக்கள் அனைவரும் திரண்டுவந்து இருவரது உடலுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இருவரது உடல்களும் அடக்கம் செய்வதற்கான ஒரே வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டன. மயானத்தில் இருவரது உடல்களும் அருகருகில் அடக்கம் செய்யப்பட்டன.


Next Story