விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்
சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சிலைகள்
ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி தமிழ் மாதமான புரட்டாசி மாதம் 1-ந்தேதியான அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது.
கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இதனால் தற்போது பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பல்வேறு வடிவங்களில்...
பெரம்பலூர்-துறையூர் சாலையிலும், ஆலத்தூர் கேட் பகுதியிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 1 அடி முதல் 9 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை அழகிய கலைநயத்துடன் தத்ரூபமாக உருவாக்குகின்றனர். பரமசிவன்-பார்வதி, முருகன், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், சித்தி, புத்தி ஆகியோருடன் விநாயகர் இருப்பது, பல்வேறு வாகனங்களில் கம்பீரமாக வீற்றிருப்பது, சிங்கம், மான் உள்ளிட்டவற்றின் மீது அமர்ந்து இருப்பது என்று விதவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. இந்த சிலைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு, அலங்கார ஒப்பனைகள் செய்யும் பணியில் கடலூர், சென்னை, கோவை மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நூற்றுக்கணக்கான சிலைகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. அவற்றின் உயரத்தை பொறுத்து விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு செய்யப்படும் விநாயகர் சிலைகள் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி அருகே உள்ள அரியலூர், திருச்சி மாவட்டங்களில் இருந்தும் வாங்குவதற்கு பல்வேறு தரப்பினர் வருகை தருகின்றனர்.
மூலப்பொருட்களின் விலை உயர்வு
இதுகுறித்து விநாயகர் சிலைகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறுகையில், சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் காகித கூழ், கிழங்கு மாவு ஆகியவற்றால் விநாயகர் சிலை தயாரிக்கப்படுகிறது. இவற்றை நீர் நிலைகளில் கரைப்பதால் நீர்மாசுபாடு ஏற்படாது. இங்கு விற்பனைக்கு உள்ள சிலைகளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விழாக்குழுவினர் வாங்கி செல்ல 'ஆர்டர்' கொடுத்துள்ளனர். பெரிய விநாயகர் சிலைகள் ரூ.12 ஆயிரம் முதல் விற்கப்படுகின்றன. சிலைகளின் உயரம் மற்றும் கலைநயத்துக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது விநாயகர் சிலைகள் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் சிலைகள் தயாரிக்க தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. அப்படி கிடைத்தாலும் தொழிலாளர்களின் கூலி அதிகமாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு சிலைகளின் விலை சற்று கூடுதலாகவே இருக்கும் என்றனர்.