மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபருக்கு தர்ம அடி; 50 கள்ளச்சாவிகள் பறிமுதல்


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபருக்கு தர்ம அடி; 50 கள்ளச்சாவிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Oct 2023 9:30 PM GMT (Updated: 17 Oct 2023 9:30 PM GMT)

திண்டுக்கல், தேனியில் கைவரிசை காட்டி மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். அவரிடம் இருந்து 50-க்கும் மேற்பட்ட கள்ளச்சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல்

திண்டுக்கல், தேனியில் கைவரிசை காட்டி மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். அவரிடம் இருந்து 50-க்கும் மேற்பட்ட கள்ளச்சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மோட்டார் சைக்கிள் திருட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொத்தப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். அவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 21). கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள கலிக்கம்பட்டியில் வசிக்கிற உறவினர் ஒருவரது வீட்டுக்கு வந்தார்.

நேற்று காலை வெங்கடேஷ், ஊருக்கு செல்வதாக உறவினரிடம் கூறி வீட்டை விட்டு வெளியே புறப்பட்டார். அப்போது, வழியில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை கள்ளச்சாவி போட்டு வெங்கடேஷ் திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் எச்சரித்ததால், மோட்டார் சைக்கிளை திருட முடியவில்லை.

பின்னர் அங்கிருந்து கலிக்கம்பட்டி காலனி பகுதிக்கு வெங்கடேஷ் நடந்து சென்றார். அங்கு வீட்டின் முன்பு நின்றிருந்த ஜோன்பிரவீன் என்பவரின் மோட்டார் சைக்கிளை, தன்னிடம் இருந்த கள்ளச்சாவியை போட்டு திறந்தார். அந்த மோட்டார் சைக்கிளை திருடிய வெங்கடேஷ், மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓட்டி சென்றார்.

கட்டி வைத்து தர்ம அடி

சிறிது தூரம் சென்றதும் நிலைதடுமாறி அவர், மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை தூக்கி விட்டனர். அந்த சமயத்தில், அங்கு ஜோன்பிரவீனும் நின்று கொண்டிருந்தார். அவரும் ஓடிப்போய் பார்த்தார்.

அப்போது தனது மோட்டார் சைக்கிள் அங்கு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக வெங்கடேசிடம் விசாரணை நடத்தியதில், முன்னுக்குப்பின் முரணாக அவர் பதில் அளித்தார். ஒரு கட்டத்தில், உறவினர் வீட்டுக்கு வந்த இடத்தில் கள்ளச்சாவி போட்டு ஜோன்பிரவீனின் மோட்டார் சைக்கிளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு அங்கிருந்த கிராம மக்கள் வெங்கடேசை அழைத்து சென்றனர். பின்னர் அவரை அங்கு கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

திண்டுக்கல், தேனியில் கைவரிசை

இதுதொடர்பாக சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் வெங்கடேஷ் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது இவர் திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

கலிக்கம்பட்டி வருவதற்கு முன்பு, தேனியில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடி அவர் விற்றிருக்கிறார். இந்த வழக்கில் போலீசார் அவரை தேடி வந்தனர். ஆனால் போலீசாருக்கு, டிமிக்கி கொடுத்து விட்டு கலிக்கம்பட்டிக்கு வெங்கடேஷ் வந்துள்ளார்.

50 கள்ளச்சாவிகள் பறிமுதல்

பதுங்க வந்த இடத்திலும் வெங்கடேஷ் கைவரிசை காட்டி, பொதுமக்களிடம் வசமாக சிக்கி கொண்டார். அவரிடம் இருந்து 3 செல்போன்கள், 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களின் சாவிகள், ஒரு பென்டிரைவ், பவர் பேங்க் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஜோன்பிரவீன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கைதான வெங்கடேஷ் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளையும் சரளமாக பேசுகிறார். இதனால், தான் திருடுகிற மோட்டார் சைக்கிள்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம் என்றார்.


Next Story