வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் கணினிகள் திருட்டு


வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் கணினிகள் திருட்டு
x

வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் கணினிகள் திருட்டுபோனது.

திருச்சி

துவாக்குடி:

துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான்கோட்டையில் திருவெறும்பூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை நேற்று முன்தினம் பணி முடிந்த பின்னர், ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில் இந்த அலுவலகத்தில் உள்ள கணினி அறை ஜன்னலின் கண்ணாடி கதவை மர்ம நபர்கள் திறந்து, கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்து, 2 கணினிகள், ஸ்பீக்கர், பிரிண்டர், மோடம் ஆகியவற்றை திருடியுள்ளனர். மேலும் அந்த அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளையும் திறந்து பார்த்துள்ளனர். மற்ற அறைகளில் எதுவும் இல்லாததால், கணினிகள் உள்ளிட்டவற்றுடன் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து வேளாண் உதவி அலுவலர் குமரன் துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம், அவர்கள் திருடிய பொருட்களை ஏதேனும் வாகனத்தில் கொண்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததும், அதேபோல் அலுவலகத்திற்கு காவலாளி நியமிக்கப்படாததும், இது போன்ற திருட்டு சம்பவம் நடைபெறுவதற்கு வழி வகுத்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் திருட்டுப்போன ஒரு கணினியில் திருவெறும்பூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பற்றிய தகவல்கள் மற்றும் திருவெறும்பூர் வட்டார வேளாண் விரிவாக்க மைய ஊழியர்களின் தகவல்கள், திருவெறும்பூர் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கணினிகளை கண்டுபிடித்தால் தான் அந்த அலுவலகத்திற்குதேவையான தகவல்கள் கிடைக்கும். இல்லை என்றால் அந்த தகவல்களை பெறுவதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஊழியர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

1 More update

Next Story