நிர்வாகிகளுக்குள் ஒற்றுமை இல்லை...! பொது மேடைகளில் சண்டை...! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை...!


நிர்வாகிகளுக்குள் ஒற்றுமை இல்லை...! பொது மேடைகளில் சண்டை...!  - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை...!
x

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நடந்தது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

பா.ஜனதா அரசை வீழ்த்துவதற்காக தேசிய அளவில் 'இந்தியா' கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. இந்த கூட்டணியில் தி.மு.க. பிரதான கட்சியாக இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. தி.மு.க.வுடனான கூட்டணி வலுவாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று கலந்துரையாடிய ராகுல், கார்கே ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருந்தனர்.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நடந்தது.

மாவட்ட செயலாளர்கள் மத்தியில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

"கட்சியினர் இப்போதே பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும்.

குறிப்பாக பூத் கமிட்டிகளை பலப்படுத்த வேண்டும். இல்லாத இடங்களில் உடனே அமைக்க வேண்டும். அனைத்து மாவட்ட செயலாளர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள பூத் கமிட்டிகளை ஆய்வு செய்ய வேண்டும்.

கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் அடிக்கடி கலந்துரையாடி பூத் அளவில் கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

ஒரு சில மாவட்டங்களில் நிர்வாகிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்ற தகவல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இது உங்களுக்கும் நல்லதில்லை, கழகத்துக்கும் நல்லதில்லை. அதிலும் குறிப்பாக பொது மேடைகளில் சண்டை போடுகிற காட்சிகளை வாட்ஸ்அப்பில் நானே பார்க்கிறேன்.

தென்காசியில், மாவட்டச் செயலாளருக்கும் ஒன்றியப் பெருந்தலைவருக்குமான மோதல்-எல்லா மீடியாக்களும் இருக்கும்போதே, ஆர்ப்பாட்ட மேடையிலேயே நடந்திருக்கிறது. அதன் பிறகுதான், மாவட்டச் செயலாளர் மாற்றப்பட்டு இருக்கிறார்.

அமைச்சர் மஸ்தான் மாவட்டத்தில், நேருக்கு நேராக மோதல் ஏற்படுகிறது. தன்னைக் கேள்வி கேட்கிறவர்களுக்கு மைக்கை வைத்துக்கொண்டே அமைச்சர் பதில் சொல்கிறார். இதை எல்லா சேனல்களும் பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி பதிவு செய்கிறார்கள் என்பதே சில அமைச்சர்களுக்கு தெரியவில்லை.

கழகம் எல்லா தொண்டர்களுக்கும் பொதுவானது! நிர்வாகிகளுக்கு மட்டுமே கழகம் சொந்தம் இல்லை! ஆட்சி அனைவருக்கும் பொதுவானது! அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே ஆட்சி சொந்தமல்ல!

கழகம் ஆட்சிக்கு வந்தபோது பேரறிஞர் அண்ணா மகிழ்ச்சி அடையவில்லை. வருத்த பட்டார். இனி கட்சி என்ன ஆகும் என்று வருந்தினார். தலைவர் கலைஞர் அவர்கள்தான் கட்சியையும் ஆட்சியையும் ஒருசேர வளர்த்தெடுத்தார்.

அத்தகைய பாணியை நாமும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். ஆட்சியைப் பிடிக்க கட்சி பயன்பட வேண்டும்!

கட்சியைப் பலப்படுத்த ஆட்சி துணைபுரிய வேண்டும்! அதற்கு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அணிச்செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டக்கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர-கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகிய அனைவரும் ஒற்றைச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும். ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்


Next Story