சென்னை விமான நிலையத்தில் தீயணைப்பு வீரர்கள் நடத்திய திடீர் ஒத்திகையால் பரபரப்பு


சென்னை விமான நிலையத்தில் தீயணைப்பு வீரர்கள் நடத்திய திடீர் ஒத்திகையால் பரபரப்பு
x

சென்னை விமான நிலையத்தில் தீயணைப்பு வீரர்கள் நடத்திய திடீர் ஒத்திகையால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் திடீரென அபாய எச்சரிக்கை மணி ஒலித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓடுபாதையின் மேற்கு முனை பகுதியில் ஏதோ ஒரு பொருள் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. சென்னை விமான நிலைய தீயணைப்பு வீரர்கள், மருத்துவ குழுவினர், அதிரடிப்படை வீரர்கள், விமான பாதுகாப்பு படையினர், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மீட்புக்குழுவினர் ஸ்ட்ரச்சர்களில் சிலரை தூக்கிக் கொண்டு வந்து, மருத்துவ குழுவினரிடம் ஒப்படைத்தனர். சிறிது நேரத்தில் தீ அணைக்கப்பட்டது. அங்கு பழைய இரும்பு பொருட்கள், பழைய கழிவுகள் அனைத்தும் போடப்பட்டு தீக்கொளுத்தப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் ஏப்ரல் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஒரு வார காலம் தீயணைப்பு பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் தீயை உடனடியாக அணைப்பது, பாதிக்கப்பட்டவர்களை விரைந்து நடவடிக்கை எடுத்து மீட்பது போன்ற பாதுகாப்பு ஒத்திகையில் தீயைணப்பு வீரர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

அது ஒத்திகை போன்று தெரியாமல் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக சென்னை விமான நிலைய தீயணைப்புத்துறை அதிகாரிகள் இந்த திடீர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story