என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை


என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 22 Jun 2023 12:25 AM IST (Updated: 22 Jun 2023 3:19 PM IST)
t-max-icont-min-icon

குன்னம் அருகே என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்

வீட்டின் பூட்டு உடைப்பு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வம்(வயது 27). என்ஜினீயரான இவர் சென்னை சாப்ட்வேர் கம்பெனியில் வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வருகிறார். செல்வத்திற்கு சங்கீதா என்ற மனைவியும், 1 பெண் குழந்தையும் உள்ளனர். செல்வம் தனது மனைவி சங்கீதா மற்றும் குழந்தையுடன் கோவையில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு கடந்த 17-ந் தேதி சென்றார்.

இந்நிலையில் ஓலைப்பாடியில் உள்ள தனது வீட்டின் இரும்பு கதவுகள் மற்றும் ராஜநிலை கதவு பூட்டும் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக நேற்று காலை செல்வம் வீட்டின் அருகில் உள்ளவர்கள் போன் மூலமாக தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் உடனடியாக செல்வம் கோவையில் இருந்து ஓலைப்பாடி கிராமத்திற்கு வந்தார். பின்னர் வீட்டை பார்த்தபோது வீட்டின் முன் வாசலில் உள்ள 2 கேட்கள் பூட்டு உடைக்கப்படும், மெயின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டும் இருந்தது. அதனைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்படும் இருந்தது.

நகை, பணம் கொள்ளை

அங்கு பீரோவில் இருந்த செயின், மோதிரம், தங்க காசு உள்ளிட்ட 9 பவுன் தங்க நகைகளும், ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களும் மற்றும் ரூ.32 ஆயிரம் பணம், நவீன மடிகணினி ஆகியவற்றை நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து செல்வம் குன்னம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ஒ.கே. செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு, சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story