திருக்குறளை கவர்னர் சரியான பார்வையில் புரிந்து கொள்ள வேண்டும் - கே.எஸ்.அழகிரி


திருக்குறளை கவர்னர் சரியான பார்வையில் புரிந்து கொள்ள வேண்டும் - கே.எஸ்.அழகிரி
x

கோப்புப்படம்

திருக்குறளை கவர்னர் சரியான பார்வையில் புரிந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நமது ஆன்மிகத்தின் ஆதாரம் திருக்குறள் என்று சொல்லி இருக்கிறார். ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வதில் கவர்னருக்கு சற்று சிரமம் இருக்கும் என்று கருதுகிறேன். ஆன்மிகம் என்பது மதத்தில் இருந்து அப்பாற்பட்டது. அதற்கு ஒரு நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை தன்னை விடவும் ஒரு உயர்ந்த சக்தி பிரபஞ்சத்தில் இருப்பதாகவும், அந்த சக்தியின் மீது நம்பிக்கையும், பற்றும் வைப்பது மனிதனுடைய வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும், ஆனால் அந்த சக்திக்கு உருவம் கொடுப்பதோ அல்லது பெயரிடுவதோ அல்லது அமைப்பு ரீதியாக அதை உருவாக்குவதோ ஆன்மிகத்தினுடைய பண்பு அல்ல.

இதைத் திருவள்ளுவர் மிக நன்றாக அறிந்து தன்னுடைய திருக்குறளை அமைத்திருக்கிறார். அதில் எந்த மதத்தைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ, இறை வழிபாட்டைப் பற்றியோ, மன்னர்களைப் பற்றியோ அல்லது அன்று வாழ்ந்த வள்ளல்களைப் பற்றியோ குறிப்பிடுவதே கிடையாது. நீங்கள் புரிந்து கொண்டிருக்கிற ஆன்மிகம் என்பது ஏதாவது ஒரு மதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. நீங்கள் வேறு மொழிக்காரர் என்ற காரணத்தினால் திருக்குறளை அறிந்து கொள்கிற உங்கள் முயற்சிக்கு தமிழக காங்கிரஸ் பாராட்டு தெரிவிக்கிறது. ஆனால், ஒரு சரியான பார்வையில் அதனை புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story