திருவாலங்காடு ஒன்றியக் குழு கூட்டத்தை புறக்கணித்து 6 தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு - தீர்மான நகலை கிழித்தெறிந்ததால் பரபரப்பு


திருவாலங்காடு ஒன்றியக் குழு கூட்டத்தை புறக்கணித்து 6 தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு - தீர்மான நகலை கிழித்தெறிந்ததால் பரபரப்பு
x

திருவாலங்காடு ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மான நகலை கிழித்தெறிந்த நிலையில் கூட்டத்தை புறக்கணித்து 6 தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்

திருவாலங்காடு ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் ஜீவா தலைமையில் நேற்று நடைப்பெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, கலைச்செல்வி ஆகியோர் வரவேற்றார், ஒன்றியக் குழு துணைத் தலைவர் சுஜாதா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், மன்றப் பொருள் வாசிக்கப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. கவுன்சிலருமான தினகரன் ஒன்றிய அலுவலக வளாகத்தில் உயர்மின் கோபுரம் 2 மாதங்களாக பழுதடைந்துள்ளது அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும், திருவலாங்காடு ஒன்றியத்தில் இயங்கி வரும் அம்மா சிமெண்ட் விற்பனை மையத்தில் பணிபுரிபவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், அவர்கள் முறையான பதிவேடுகளை பராமரிப்பது இல்லை எனவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி அம்மா சிமெண்ட் விற்பனை மையத்தில் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார். திருவலாங்காடு ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களை ஒன்றிய அதிகாரிகள் அவர்கள் பணிகளில் முழுமையாக ஈடுபடுகின்றனரா? என ஆய்வு செய்வதில்லை என கவுன்சிலர் ஜெயபாரதி குற்றம்சாட்டினார்.

திருவலாங்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்பாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலைக்கு கூடுதல் கட்டிட வரைபட அனுமதி மற்றும் தொழில் உரிமம் அனுமதி வழங்கக்கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு கவுன்சிலர் தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஒன்றிய அதிகாரிகள் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதற்கு ஒன்றிய குழு தலைவர் ஜீவா ஏற்கனவே முறையாக ஆய்வு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆய்வு தேவையற்றது என தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் தினகரன் தீர்மான நகலை கிழித்தெறிந்து கூட்டத்திலிருந்து வெளியேறினார். அவருடன் ஒன்றிய குழு துணை தலைவர் சுஜாதா உட்பட 5 கவுன்சிலர்களும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

ஒன்றியக் குழு கூட்டத்தில் இருந்து ஆளும் தி.மு.க. கட்சியை சேர்ந்த ஒன்றிய குழு துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story