தூத்துக்குடி: ரெயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 2 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடியில் ரெயில் தண்டவாளத்தில் குடிபோதையில் படுத்து தூங்கிய 2 பேர் ரெயில் மோதி உயிரிழந்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் குடிபோதையில் ரெயில் தண்டவாளத்தில் தூங்கிய நண்பர்கள் 2 பேர் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது,
நெல்லை மாவட்டம் பணகுடி தளவாய்புரத்தை சேர்ந்தவர் குழந்தைதுரை. இவருடைய மகன் ஜெபசிங்(வயது 27). இவர் நேற்று தூத்துக்குடியி நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்து உள்ளார்.
அங்கு தனது நண்பர்களான தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மாரிமுத்து(23), பசும்பொன்நகரை சேர்ந்த காளிப்பாண்டியன் மகன் மாரிமுத்து(23) ஆகியோரை சந்தித்து உள்ளார். இவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்கள் ஜெயிலில் இருந்த போது ஏற்பட்ட பழக்கத்தால் நண்பர்களாகி உள்ளனர்.
குடிபோதை
நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு இரவு 10 மணி அளவில் தூத்துக்குடி 3-வது மைல் ரெயில்வே பாலத்துக்கு கீழே தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மீளவிட்டான் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்து உள்ளனர்.
குடி போதை அதிகமானதால் 3 பேரும் ரெயில் தண்டவாளத்திலேயே படுத்து தூங்கி உள்ளனர். இதில் மாரிமுத்து 2 பேரும் தண்டவாளத்தின் குறுக்கே படுத்து தூங்கி உள்ளனர். ஜெபசிங் தண்டவாளத்தின் நடுவே நீளவாக்கில் படுத்து தூங்கி உள்ளார்.
சாவு
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு ஆந்திரா மாநிலம் நூஸ்வித் ரெயில் நிலையம் நோக்கி ஒரு சரக்கு ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் 3-வது மைல் பாலத்தின் அடியில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டு இருந்த 3 பேர் மீதும் மோதியது.
இதில் குறுக்காக படுத்து இருந்த ச.மாரிமுத்து, கா.மாரிமுத்து ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அதே நேரத்தில் ஜெபசிங் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதைத் தொடர்ந்து ஜெபசிங் அங்கிருந்து அருகில் இருந்த தெருவுக்கு சென்று நண்பர்கள் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.