கவர்னர் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் - எல்.முருகன்


கவர்னர் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் - எல்.முருகன்
x

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை, மக்கள் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என எல்.முருகன் கூறியுள்ளார்.

கோவை,

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய மந்திரி எல்.முருகன் இன்று காலை விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளி தொழில் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது இந்த பகுதிகளில் ஜவுளி தொழிலானது நலிவடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் திமுக கொண்டு வந்த மின் கட்டண உயர்வு தான். தொழில்களுக்கு மட்டுமின்றி, வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.

இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். தொழில்துறையினர் மின்கட்டண உயர்வை குறைக்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு அதனை கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே அரசு இதில் கவனம் செலுத்தி, ஜவுளி துறையினர் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

நெல்லையில் பட்டியலின மாணவர் மீது வன்கொடுமை தாக்குதல் நடந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வேங்கைவயல் விவகாரத்தின் போதே அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால், தற்போது நெல்லையில் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. எனவே இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. மக்கள் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 1000-க்கும் மேற்பட்ட தேவையற்ற சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் தொழில்துறையினருக்கு ஆதரவாக பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக அரசு பா.ஜ.கவினரை தேடி பிடித்து வழக்கு போட்டு வருகிறது. வழக்குகளுக்கு எல்லாம் பாஜக அஞ்சுவது கிடையாது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை சந்தித்து, இன்னும் வேகத்துடன் வேலை செய்பவர்கள் தான் பா.ஜ.கவினர். எனவே வழக்கு போட்டு எங்களை அடக்கி விடலாம் என நினைக்க வேண்டாம்.

அரசு அனுப்ப கூடிய கோப்புகளில் எல்லாம் கண்ணை மூடி கொண்டு கையெழுத்து போடுவது கவர்னரின் வேலை அல்ல. இவர்களுக்கு தாங்கள் அனுப்பும் கோப்புகளில் எதுவும் கேட்காமல் கையெழுத்து போட்டால் கவர்னர்கள் நல்லவர்கள். இல்லையென்றால் கெட்டவர்கள் போன்று சித்தரிப்பார்கள். இதுதான் வழக்கமாக உள்ளது.

கவர்னர் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்தும், அதில் கைதான நபரின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும் விரிவாக விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தொழில்துறையை ஊக்குவிக்க தவறி வருகிறது.

கவர்னர்களை எதிர்த்து தமிழக, கேரள அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இப்படி எல்லாம் அவர்களை மிரட்டி ஒன்றும் செய்ய முடியாது. கவனர்னருக்கு என சில அதிகாரங்கள் உள்ளன. அதற்கு ஏற்ப அவர்கள் செயல்படுகின்றனர். மேலும் கவர்னர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story