60 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு ஆட்டோ - டிரைவர் உள்பட 3 பேர் காயம்


60 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு ஆட்டோ - டிரைவர் உள்பட 3 பேர் காயம்
x

திருவள்ளூரில் 60 அடி ஆழ கிணற்றுக்குள் சரக்கு ஆட்டோ பாய்ந்தது. இதில் டிரைவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரத்திலிருந்து வீடு கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ஆட்டோ ஒன்று நேற்று காலை ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை பகுதிக்கு சென்றது. ஆர்.கே.பேட்டை அருகே ராஜா நகரம் மோட்டூர் கிராமம் அருகே உள்ள ஏரிக்கரை மீது சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ, அருகில் உள்ள தரை கிணற்றுக்குள் பாய்ந்தது.

இதில் சரக்கு ஆட்டோ டிரைவர் நேரு (வயது 30) வாகனத்தின் முன்புற கண்ணாடியை உடைத்து கொண்டு தண்ணீரில் இருந்து வெளியே வந்து உயிர் தப்பினார். வாகனத்தின் பின் பகுதியில் பயணம் செய்த தீனா (20), சதீஷ் (26) ஆகியோரும் நீச்சலடித்து கிணற்றிலிருந்து வெளியே வந்து தப்பினர். இதில் 3 பேரும் காயம் அடைந்தனர். ஆனால் கிணற்றில் பாய்ந்த சரக்கு ஆட்டோ, வீட்டு கட்டுமான பொருட்களுடன் தண்ணீரில் மூழ்கியது. சுமார் 60 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் அடிப்பாகத்தில் சென்று சரக்கு ஆட்டோ சிக்கிக்கொண்டது. இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story