சென்னையில் புலிகள் காப்பக மாநாடு: அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னையில் புலிகள் காப்பக மாநாட்டினை அமைச்சர் ராமச்சந்திரன், தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னை எழும்பூரில் வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு புலிகள் காப்பகம் மாநாடு நடத்தப்படுகிறது. நிகழ்ச்சிகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராமசந்திரன், 'வனப்பகுதிகளில் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும், வனப்பாதுகாப்பு, மனித வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கை, வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை தடுத்திட வனப்பணியாளர்கள் குழு அமைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
சென்னை மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். பரந்தாமன் எம்.எல்.ஏ. வாழ்த்துரை வழங்கினார்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சையத் முஜம்மில் அப்பாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
வன உயிரின தலைமை வனப்பாதுகாவலர்(பொ) சீனிவாஸ்ரா ரெட்டி வரவேற்று பேசினார். சென்னை மண்டல வனப்பாதுகாவலர் கீதாஞ்சலி, சென்னை மாவட்ட வனப்பாதுகாவலர் பிரியதர்ஷினி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






