தனித்தீர்மானத்துக்கு எதிர்ப்பு.. தமிழக சட்டசபையில் இருந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு


தனித்தீர்மானத்துக்கு எதிர்ப்பு.. தமிழக சட்டசபையில் இருந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 14 Feb 2024 6:05 AM GMT (Updated: 14 Feb 2024 6:22 AM GMT)

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது என்றும், அரசியலமைப்பின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது என்றும் கூறினார்.

சென்னை:

ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரண்டு தனித்தீர்மானங்களை முன்மொழிந்தார்.

அப்போது பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையானது, முற்றிலும் நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது என்றும், அரசியலமைப்பின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது என்றும் கூறினார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் சதியை முறியடிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த இரண்டுக்கும் எதிராக நாம் அனைவரும் ஒருசேர குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று கூறிய முதல்-அமைச்சர், இந்த தீர்மானங்களை நிறைவேற்றி தரும்படி உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.

முதல்-அமைச்சர் பேசி அமர்ந்ததும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. தமிழக வாழ்வுரிமை கட்சிதலைவர் வேல்முருகன் தீர்மானத்தை ஆதரித்து பேசினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது தீர்மானத்தை எதிர்த்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.


Next Story