பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; 'எங்கள் தைரியத்தை குறைத்துவிடலாம் என்று நினைத்து விட வேண்டாம்' - அண்ணாமலை


பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; எங்கள் தைரியத்தை குறைத்துவிடலாம் என்று நினைத்து விட வேண்டாம் - அண்ணாமலை
x

கோவை பாஜக அலுவலகத்தில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

கோவை,

கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதி வி.கே.மேனன் சாலையில் நேற்று இரவு பைக்கில் வந்த இருவர் அப்பகுதியில் உள்ள பாஜக அலுவலம் நோக்கி பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றனர். பெட்ரோல் குண்டு வெடிக்காததால் அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழவில்லை. பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் கோவை ஒப்பனக்காரவீதியில் உள்ள துணைக்கடை ஒன்றின் மீது மண்ணென்னை குண்டு வீசப்பட்டுள்ளது.

மண்ணென்னை குண்டு வீச்சால் தீப்பிடித்த நிலையில் கடையில் இருந்த ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாஜக மாவட்ட செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சரவணன் ஆகியோரின் வீடுகளில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு விசப்பட்டுள்ளது. மேலும், 2 கார், 2 ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பாஜக அலுவலகம், பாஜக நிர்வாகிகள் வீடுகள் உள்பட 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கோயம்புத்தூர் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழ்நாடு பாஜக கோயம்புத்தூர் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.

இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை

திமுக அரசு உணர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.


Next Story