முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து..! பா.ஜ.க. கிண்டல்


முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து..! பா.ஜ.க. கிண்டல்
x

நமது முதல்-அமைச்சருக்கு பிடித்த மொழியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தமிழக பா.ஜ.க. ஊடக பிரிவின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

சென்னை:

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடினார். முதல்-அமைச்சருக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வாழ்த்துகளை தெரிவித்தன. பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், தமிழக பா.ஜ.க. தங்களின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்'சமூக வலைதளத்தில் சீனாவின் மாண்டரின் மொழியில் முதல்-அமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து பதிவு செய்துள்ளனர்.

சீனாவின் மாண்டரின் மொழியில் தமிழக பா.ஜ.க. வெளியிட்ட பதிவில், 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் பெற வாழ்த்துகிறோம்' என கூறப்பட்டுள்ளது.

'தமிழ்நாடு பா.ஜ.க.வின் ஊடக பிரிவில் சார்பில், நமது முதல்-அமைச்சருக்கு பிடித்த மொழியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்' என பா.ஜ.க. ஊடக பிரிவின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது .

கடந்த 28-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சி தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடுத்த பத்திரிகை விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த ராக்கெட் படத்தில் சீன கொடி இருந்தது. இதை பிரதமர் மோடி தனது பேச்சின்போது சுட்டிக்காட்டி தி.மு.க.வை விமர்சனம் செய்தார்.

விளம்பரத்தில் சீன கொடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். இது தெரியாமல் நடந்த தவறு என்றும், இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்றும் கூறி முற்றுப்புள்ளி வைத்தார். எனினும் முதல்-அமைச்சரின் பிறந்தநாளன்று சீன மொழியில் பா.ஜ.க. தரப்பில் வாழ்த்து கூறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணமலை, "சீனா நமது எதிரி நாடு அல்ல என கனிமொழி கூறியிருக்கிறார். அப்படியென்றால் நமது முதலமைச்சருக்கு சீன மொழியில் வாழ்த்து சொல்வதில் என்ன தவறு? அதைத்தான் எங்கள் ஊடக பிரிவு நண்பர்கள் செய்திருக்கிறார்கள். அதில் புண்படுத்தும் வகையில் எந்த கருத்தும் இருப்பதாக தெரியவில்லை." என்றார்.


Next Story