நான் பட்டம் வாங்கும்போது பிரதமரே வந்தார்...! பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்- மு.க.ஸ்டாலின் பேச்சு
நான் பட்டம் வாங்கும்போது பிரதமரே வந்தார் என மாணவர்கள் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்திருந்தார். நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 'செஸ்' ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கினார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். இதற்காக இன்று காலை 9.55 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து பிரதமர் மோடி கார் மூலம் புறப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்குக்கு வந்தார். அவரை பல்கலைக்கழகத்தின் வேந்தரான கவர்னர் ஆர்.என்.ரவி வாசலில் நின்று வரவேற்றார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோரும் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்பதால் அங்குள்ள அறைக்கு சென்று பட்டமளிப்பு விழாவுக்கான அங்கி அணிந்து வந்தார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோரும் அங்கி அணிந்து வந்திருந்தனர்.
பட்டமளிப்பு விழா மேடைக்கு சரியாக காலை 10 மணிக்கு வந்ததும் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. விழாவுக்கு வந்த அனைவரையும் துணைவேந்தர் வேல்ராஜ் வரவேற்று பேசினார். இதைத் தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பல்கலைக்கழக அளவில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி படிப்புகளில் முதலிடம் பெற்ற 69 மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடி தங்கத்தால் ஆன பதக்கங்களை வழங்கினார்.
இந்த 69 மாணவர்களில் 31 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளில் படித்தவர்கள். மீதமுள்ள 38 பேர் இதர பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் படித்து முதலிடம் பிடித்தவர்கள்.
பட்டமளிப்பு விழாவில் கவுரவ விருந்தினராக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
"தமிழ்நாட்டிற்கு உலக அளவில் பெருமை சேர்க்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைத்தற்காக பிரதமருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய உயர் கல்வித் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தேசிய உயர் கல்விக்கான தரவரிசைப் பட்டியலில், பெருவாரியாக இடம்பெற்றுள்ளவை தமிழக கல்வி நிறுவனங்கள்.
நான் பட்டம் வாங்கும்போது பிரதமரே வந்தார் என மாணவர்கள் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்.
பட்டங்கள் என்பது வேலைவாயப்புக்காக மட்டும் இல்லை. அது அறிவாற்றலை மேம்படுத்துவதற்கானது என்பதை மறக்கக் கூடாது. அறிவாற்றல்தான் அனைத்திலும் உயர்வானது என்பதை உணருங்கள். தமிழர்கள் எப்போதும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.சாதி, மதம், பதவி, அனுபவம் ஆகிய அனைத்தின் தன்மையும் வேறுபடும்; அறிவு மட்டுமே ஒரே அளவுகோலில் வைத்து பார்க்கப்படுகிறது. அறிவாற்றல் தான் அனைத்திலும் வலிமையானது.
கல்வி என்பதுதான் யாராலும் திருட முடியாத, பறிக்க முடியாத சொத்து. எனவேதான் படிப்பிற்கு மட்டும் எத்தகைய தடைக்கல்லும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறோம். அதனால்தான் திராவிட மாடல் தமிழக அரசானது, கல்விக் கண்ணை திறப்பதையே பெரும்பணியாக கொண்டு செயல்பட்டு வருகிறது. திராவிட இயக்கத்தின் முழுமுதற் கொள்கையான சமூகநீதியின் அடிப்படையே கல்விதான்.
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் கல்லூரிக் கல்வி, அனைவருக்கும் கல்லூரி உயர் கல்வி, அனைவருக்கும் கல்லூரி ஆராய்ச்சி கல்வி என்ற இலக்கை நோக்கி தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. உயர் கல்வியை மேம்படுத்த ஊக்கத் தொகை, இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.பழமைவாதத்தை புறந்தள்ளி, புதியவற்றை ஏற்று செயல்பட்டால் தான் பெறும் பட்டத்துக்கு பெருமை;
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் பொற்காலத்தை உருவாக்க தொடர்ந்து அயராது உழைப்போம் என்று அவர் கூறினார்.