ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.19 லட்சம் மோசடி
ரெயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.19 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் 2 பேர் மனு அளித்தனர்.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோட்டீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று அவர்களிடம் அதுதொடர்பாக கேட்டறிந்தனர்.
கூட்டத்தில் கே.வி.குப்பம் தாலுகா தொண்டான்துளசி கிராமத்தை சேர்ந்த மஜினி அளித்த மனுவில், எனது கணவர் கூலி வேலை செய்கிறார். எனக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். மூத்த மகன் பிளஸ்-2 படித்துள்ளான். அவனுக்கு ராணுவத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி குடியாத்தம் எர்த்தாங்கலை சேர்ந்த ஒருவர் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பெற்றார். ஆனால் அவர் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திரும்ப கேட்டால் ஆபாசமாக பேசுகிறார். அவரிடமிருந்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
ரூ.19 லட்சம் மோசடி
குடியாத்தம் தாலுகா பூசாரிவலசை கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் அளித்த மனுவில், நான் விவசாயம் செய்து வருகிறேன். காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ஒருவர் ரெயில்வே துறையில் பலருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும், எனது மகனுக்கு வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். சில நாட்களில் அந்த நபர் அவருடைய நண்பருடன் வந்து என்னிடம் பணம் கேட்டார். அதன்பேரில் கடந்த 2019-ம் ஆண்டு 2 பேரிடமும் ரூ.9 லட்சம் கொடுத்தேன். ஆனால் இதுவரை வேலை வாங்கி தராமல் மோசடி செய்து வருகின்றனர். பணத்தை கேட்டால் 2 பேரும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
பூசாரிவலசை கிராமத்தை சேர்ந்த மூர்த்தி அளித்த மனுவில், நான் பீடி சுற்றும் தொழிலாளி. எனக்கு 3 மகன்கள் உள்ளனர். டிப்ளமோ படித்து முடித்திருந்த மூத்த மனுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக உறவினரான காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ஒருவர் கூறினார். அதன்பேரில் கடந்த 2019-ம் ஆண்டு 2 கட்டங்களாக ரூ.10 லட்சம் அந்த நபர் மற்றும் அவருடைய நண்பரிடம் கொடுத்தேன். சில நாட்களுக்கு பிறகு போலியான ரெயில்வே பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டதற்கு சரியாக பதில் தெரிவிக்கவில்லை. அதையடுத்து பணத்தை திரும்ப தரும்படி கேட்டேன். ஆனால் இதுவரை தராமல் மோசடி செய்து வருகின்றனர். அந்த பணத்துக்கு இதுவரை ரூ.7 லட்சம் வட்டி செலுத்தி உள்ளேன். பணத்தை கேட்டால் 2 பேரும் மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.