இல்லத்தரசிகளுக்கு ஆறுதல்...தங்கம் விலை இன்று சற்று குறைந்தது
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.
சென்னை,
தங்கத்தின் மதிப்பு எப்போதும் குறையாது என்பதற்கேற்றாற் போல், அதன் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒரு பவுன் ரூ.6 ஆயிரம் என்று விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிராம் ரூ.6 ஆயிரம் என்ற அளவுக்கு விற்பனை ஆகிறது. அதிலும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 5-ந்தேதி ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்தை கடந்து, புதிய உச்சத்தை தொட்டது.
அதன் பின்னரும் தங்கம் விலையில் ஏற்றமே காணப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்து, தொடர்ந்து புதிய உச்சத்தையே பதிவு செய்து வந்தது. கடந்த 9-ந்தேதி ஒரு பவுன் ரூ.49 ஆயிரத்தையும் தாண்டியது. எப்போது வேண்டுமானாலும் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டுவிடும் என்றே சொல்லப்பட்டது.
அந்த வகையில் கடந்த 26-ந் தேதியில் இருந்து தொடர்ந்து விலை உயர்ந்து காணப்பட்டு, நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.நேற்று முன்தினம் இப்படி என்றால், நேற்று அதைவிட ஒரு படி மேலாக, ஒரே நாளில் தங்கம் விலை மளமளவென அதிகரித்து இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 250-க் கும், ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.140-ம், பவுனுக்கு ரூ.1,120-ம் அதிரடியாக உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 390-க்கும், ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்து 120-க் கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால் ஒரு பவுன் தங்கம் ரூ.51 ஆயிரத்தையும் தாண்டியிருக்கிறது.
உலக பொருளாதாரத்தில் தொடரும் மந்த நிலை காரணமாகவும், போர் பதற்றச் சூழல் காரணமாகவும் கடந்த சில நாட்களாகவே பெரும் முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தின் மீது ஆர்வமுடன் முதலீடு செய்கிறார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலையும் தாறுமாறாக ஏறுமுகத்திலேயே பயணிக்கிறது.
தொடர்ந்து தங்கம் விலை உயர்வால், வாங்கும் சக்தி, அதன் மீதான மோகம் குறைந்துவிடுமோ? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் தங்கம் விலை அதிகரித்தாலும் அதனை வாங்குபவர்கள் வாங்கத்தான் செய்வார்கள் என்ற பதில் வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த தொடர் விலை அதிகரிப்பு இல்லத்தரசிகளை கவலை அடையச் செய்து இருக்கிறது.
இந்த நிலையில், இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.50,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,370-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.81-க்கு விற்பனை செய்யப்படுகிறது.