பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கம் குறித்து அமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்


பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கம் குறித்து அமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்
x

கோப்புப்படம் 

சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களுக்கு தற்போது 12-ந்தேதிக்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளில் வருகிறது. 14-ந்தேதி (சனிக்கிழமை) போகிப் பண்டிகை. மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் 16-ந்தேதி (திங்கட்கிழமை) கரிநாள் மற்றும் உழவர் திருநாள் (செவ்வாய்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

தை பொங்கல் தினம் அரசு விடுமுறை நாளில் வந்ததால் தொடர் விடுமுறை குறைந்துள்ளது. ஆனாலும் 14-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும். அதனால் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்கள் 13-ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் பயணத்தை தொடர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் வெளியூர் பயணத்திற்கு ரெயிலில் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டனர். வழக்கமான ரெயில்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில் அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது.

ஏழை, நடுத்தர மக்கள் அரசு பஸ்களை நம்பி தான் வெளியூர் பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்த வகையில் அரசு பஸ்களில் கடந்த மாதம் 12-ந் தேதி முதல் முன்பதிவு தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் இடங்கள் நிரம்பிவிட்டன. 13, 14 ஆகிய தேதிகளில் பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கக்கூடிய விரைவு பஸ்களில் இடங்கள் இல்லாததால் பிற போக்குவரத்து கழக பஸ்களுக்கு முன்பதிவு தொடங்கி உள்ளது.

பஸ், ரெயில்களில் இடங்கள் நிரம்பியதால் பயணத்தை 12-ந்தேதிக்கு (வியாழக்கிழமை) பலர் மாற்றி வருகிறார்கள். சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களுக்கு தற்போது 12-ந்தேதிக்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல இதுவரையில் 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் பொங்கல் சிறப்பு பஸ்கள் வழக்கம் போல் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களும், பிற நகரங்களில் வருகிற இருந்தும் சிறப்பு பஸ்கள் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு இயக்க முடிவு செய்யப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நாளை (செவ்வாய்கிழமை) போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் செயலாளர் கோபால் முன்னிலையில் நடக்கிறது.

இதில் அனைத்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். பொதுமக்கள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர்களுக்கு செல்ல விரிவான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழகங்கள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வழக்கம்போல 6 சிறப்பு பேருந்து நிலையங்கள் மூலம் பஸ்களை இயக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்படுகிறது. பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகிறது. இதனை அமைச்சர் சிவசங்கர் அறிவிக்கிறார்.


Next Story