புத்தாண்டு விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்
புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு ஊட்டியில் குவிந்து வருகின்றனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பிரதேசமாக உள்ளதால் குளு, குளு காலநிலையை அனுபவிக்க ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டையொட்டி, தமிழகத்தில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இன்று 2023 புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு, சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு ஊட்டியில் குவிந்து வருகின்றனர். இதனால் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் உள்ள அறைகள் நிரம்பி வழிகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அங்குள்ள பெரிய புல்வெளி மைதானத்தில் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வெடுத்தனர்.
ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஊட்டி தேயிலை பூங்கா, ரோஜா பூங்கா, பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று மக்கள் வருகையால் களைகட்டியுள்ளது.