விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!


விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கன்னியாகுமரி,

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதே போல ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள். இந்த நிலையில் கோடை விடுமுறை சீசன் முடிந்த பிறகும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர்.

அந்த அடிப்படையில் இன்று விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரிய உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஆனால் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. காலை10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து பின்னர் படகு போக்குவரத்து தொடங்கியது.

மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.


Next Story