சென்னையில் ரத்துசெய்யப்பட்ட ரெயில்கள், மாற்று ரெயில்நிலையம் மூலம் புறப்பட ஏற்பாடு
கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 6 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் முன்னதாக அறிவித்து இருந்தது.
சென்னை,
'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அத்துடன் முக்கிய சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது.
முன்னதாக, புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 6 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னையில் ரத்துசெய்யப்பட்ட ரெயில்கள், மாற்று ரெயில்நிலையம் மூலம் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை செண்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய ரெயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 1.15 மணிக்கு செண்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய வெஸ்ட் கோல்ட் விரைவு ரெயில், திருவள்ளூரில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும். திருவனந்தபுரம் செல்லும் ரெயில், ஆவடி ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும்.
மங்களூர் விரைவு ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து மாலை 4,.30 மணிக்கு புறப்படும். ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு ரெயில், அரக்கோணத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.