போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் - மத்திய இணை மந்திரி எல்.முருகன் வலியுறுத்தல்


போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்  - மத்திய இணை மந்திரி எல்.முருகன் வலியுறுத்தல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 8 Jan 2024 5:20 PM GMT (Updated: 8 Jan 2024 6:16 PM GMT)

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, அதை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த 13 மாதங்களாக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, பணியில் இருந்து ஓய்வு பெறும் எந்தவித பணப் பலனும் வழங்கப்படவில்லை. மேலும், அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

மேலும், 16 தொழிற்சங்கங்கள் கூட்டாக சேர்ந்து, வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளன. அவர்களுடன், தமிழக அரசின் சார்பில் அமைச்சர் சிவசங்கர் பேச்சு வார்தத்தை நடத்தியபோதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து, திங்கட்கிழமை நடைபெற்ற 3-ம் கட்ட பேச்சு வார்த்தையிலும், தீர்வு ஏற்படவில்லை. இதனால், நாளை (செவ்வாய்கிழமை) திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதன்காரணமாக, தமிழகத்தில் பஸ் போக்குவரத்து முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில், பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஏராளமான மக்கள் வெளியூர்களுக்கு செல்ல உள்ளனர். இந்த நிலையில், பஸ்கள் நிறுத்தப்பட்டால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாவர். எனவே, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, அதை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். அவர்களுடன் சுமூகமான முறையில் பேச்சு வார்த்தை நடத்தி, பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story