திருச்சி சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை-புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு
ஆடு திருடர்களை பிடிக்க முயன்றபோது திருச்சி சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
சப்-இன்ஸ்பெக்டர்
திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன் (வயது 52). இவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருடன் ஏட்டு சித்திரவேலும் உடன் இருந்தார். நவல்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பூலங்குடி காலனியில் பஸ் நிறுத்தத்தில் நின்று 2 பேரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர், ஆடுகளை திருடிக்கொண்டு சென்றனர். அவர்களை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் ஏட்டு சித்திரவேல் ஆகியோர் தடுத்து நிறுத்த முயன்றபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தப்பிச்சென்றனர். இதனால் 3 பேரையும் பிடிக்க தனது மோட்டார் சைக்கிளில் பூமிநாதன் பின்தொடர்ந்து அவர்களை விரட்டிச்சென்றார்.
3 பேர் கைது
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் பள்ளத்துப்பட்டி மணி விஜய்நகர் ரெயில்வே பாலம் அருகே 3 பேரையும் அவர் மடக்கிபிடித்தார். மேலும் 3 பேரிடமும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் விசாரணை நடத்தினார். அப்போது அவரை 3 பேரும் சேர்ந்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடினர். சீருடையில் ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ெசன்று விசாரணை நடத்தினர்.
இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனை கொலை செய்தது தஞ்சாவூர் மாவட்டம் தோகூரை சேர்ந்த மணிகண்டன் (19), பேராவூரணியை சேர்ந்த 14 வயது சிறுவன், புதுக்கோட்டை மாவட்டம் அன்னப்பட்டியை சேர்ந்த 9 வயது சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையான சப்-இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.
ஆயுள் தண்டனை
கைதான மணிகண்டனுக்கு தற்போது 21 வயது ஆகிறது. அவர் மீதான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். இதில் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்த மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும், இந்திய தண்டனை சட்டம் 427 பிரிவில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும், இந்திய தண்டனை சட்டம் 201 பிரிவில் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து, இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதன்படி மணிகண்டன் ஆயுள் தண்டனையை அனுபவிக்க உள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை கணக்கில் எடுத்து கொள்ளவும் தீர்ப்பில் கூறப்பட்டது.
சிறுவர்களுக்கான நீதிமன்றம்
தீர்ப்பை வாசிக்கும் போது நீதிபதி கூறுகையில், ''ஒரு அரசு ஊழியர் சீருடையில் இருக்கும் போது கொலை செய்யப்பட்டுள்ளார். எதிரிகளிடம் இருந்து நாட்டை ராணுவத்தினர் பாதுகாக்கின்றனர். நாட்டிற்குள் உள்ள மக்களை போலீசார் பாதுகாக்கின்றனர். அரசு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்கள், வக்கீல்கள் போன்றவர்கள் அவர்களது பணியில் ஈடுபடும் போது தாக்கப்படுவது போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டியது என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதாக குறிப்பிட்டார். தண்டனை விதிக்கப்பட்ட மணிகண்டனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதான 2 சிறுவர்கள் மீதான வழக்கு விசாரணை புதுக்கோட்டையில் சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது
தடயவியல் ஆதாரங்கள்
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார். தீர்ப்பு குறித்து அவர் கூறுகையில், ''இந்த வழக்கில் நேரடி சாட்சியங்கள் இல்லாவிட்டாலும் அறிவியல் பூர்வமாக தடயவியல் ஆதாரங்கள், சங்கிலி தொடர் போல் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளன. அரசு தரப்பில் 47 சாட்சியங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 200 பக்கங்களுக்கு மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள், ரத்த மாதிரிகள், ஆவணங்கள், செல்போன் அழைப்பின் விவரம் உள்ளிட்டவை சமர்ப்பிக்கப்பட்டன. போலீசாரும் சிரமப்பட்டு இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களது முயற்சியாலும் சிறப்பான புலன் விசாரணையாலும், தகுந்த ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டதால் இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை கிடைத்துள்ளது'' என்றார்.