தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்ப்பு
இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு,
தமிழக - கேரள எல்லைப் பகுதியில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை நேரத்தில் கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று புளியரை சோதனை சாவடியை தாண்டி தென்காசி மாவட்டத்தின் கோட்டைவாசல் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது, மலை பாதையில் எஸ் வளைவில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரி செங்கோட்டையிலிருந்து கொல்லம் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து நிகழ்ந்த சிறிது நேரத்தில் கேரளாவின் ஆற்றுக்கரை பகவதி அம்மன் கோவில் நிகழ்ச்சிக்காக பயணிகள் இல்லாத சிறப்பு ரெயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் விபத்து குறித்து அறிந்த வயதான தம்பதி சண்முகையா-வடக்கத்தியம்மாள் மற்றும் காவலாளி சுப்பிரமணியன் ஆகியோர் டார்ச் லைட் காட்டி ரெயிலை நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து காரணமாக ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது, அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து சீரானது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக இரு மாநில எல்லைகளில் பரபரப்பு ஏற்பட்டது.