சாதி, மதத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சாதி, மதத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தி.மு.க.வில் இணையும் விழா
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து மு.க.ஸ்டாலின் கோவை சின்னியம்பாளையம் சென்றார். அங்கு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் மாற்றுக்கட்சியினர் 4 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் விழா நடந்தது.
விழாவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் பேசியதாவது:-
திராவிட மாடல்
இந்த நாட்டில் நம்மைப்போல் (தி.மு.க.) வெற்றி பெற்றிருக்கக்கூடிய கட்சியும் கிடையாது. நம்மைப்போல் தோற்றிருக்கக்கூடிய கட்சியும் கிடையாது. இரண்டிலும் நமக்குதான் பெருமை. வெற்றியிலும் சரி, தோல்வியிலும் சரி இரண்டிலும் நமக்குதான் பெருமை. தி.மு.க. வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல் பாடுபடக்கூடிய கட்சி.
அந்த தி.மு.க. 6-வது முறையாக மக்களுடைய அன்பை, ஆதரவை பெற்று ஆட்சியில் இருக்கிறது. எங்கள் மீது, இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு தந்திருக்கும் மக்களுக்கு தேர்தல் நேரத்தில் அளித்திருக்கும் உறுதிமொழிகள் காப்பாற்றப்பட்டு கொண்டிருக்கிறதா? இல்லையா?.
தேர்தல் நேரத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் செய்வோம் என்று சொன்னோம். கலைஞர் கருணாநிதி எப்படி தேர்தல் நேரத்தில், தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறபோது திருக்குறள் போன்று 2 வரிகளை சொல்வார். 'சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்' என்று. 6-வது முறையாக கலைஞர் கருணாநிதியுடைய வழியில் நடைபெறக்கூடிய திராவிட மாடல் ஆட்சி, சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சியாக பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
சொன்னது, சொல்லாதது
பஸ்சில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம், இது சொன்னது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய மக்களுக்காக ஆட்சிக்கு வந்தவுடன் நாங்கள் ரூ.4 ஆயிரம் தருவோம் என்றோம், இது சொன்னது. அரசு பள்ளிகளில் படித்து முடித்து கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும், அதற்காக புதுமைப்பெண் என்று ஒரு திட்டம். இது சொல்லாதது. இப்படி, சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சி நடக்கிறதா? இல்லையா?.
அதனால்தான் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பக்கத்தில் இருக்கக்கூடிய இதே கொங்கு மண்டலத்தை சார்ந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 10 ஆயிரத்துக்கு குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திருமகன் ஈவெரா அகால மரணம் அடைந்துவிட்ட காரணத்தால், அங்கு ஒரு இடைத்தேர்தல் வரவேண்டிய ஒரு சூழ்நிலை வந்தது. அதை சந்தித்தோம். அந்த தேர்தலில் அதே காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருமகன் ஈவெராவினுடைய தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நிற்கவைத்து கிட்டத்தட்ட 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்திருக்கிறோமா? இல்லையா? கணக்கு போட்டு பாருங்கள்.
கலவரம் ஏற்படுத்த முயற்சி
ஏற்கனவே நடந்த தேர்தலில் 10 ஆயிரத்துக்கும் கீழே, இப்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றி. என்ன காரணம்? இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நம்பிக்கை. அந்த அளவிற்கு நம்பிக்கையை பெற்றிருக்கக்கூடிய காரணத்தினால்தானே இவ்வளவு பெரிய வித்தியாசம். ஆகவே, இதையெல்லாம் வரவிருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலிலே, இதேபோன்ற வெற்றியை நாம் பெற்றாக வேண்டும்.
அதற்கு உறுதி எடுக்கக்கூடிய நிகழ்ச்சியாகத்தான் இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. இன்றைக்கு மதத்தை பயன்படுத்தி, சாதியை பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தலாம், குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
அதன் மூலமாக இந்த ஆட்சியை வீழ்த்திவிடலாம் என்றெல்லாம் கனவு கண்டு அந்த முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனவே, அதற்கெல்லாம் செவி சாய்க்காமல், எதை பற்றியும் கவலைப்படாமல் நம்முடைய இலக்கு என்பது நாடாளுமன்ற தேர்தல்தான்.
40-க்கு 40
கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு இடத்தை இழந்தோம். வரவிருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அந்த இடத்தையும் இழக்கக்கூடாது. புதுவையையும் சேர்த்து 40-க்கு 40. நாடும் நமதே, நாளையும் நமதே. ஏதோ தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மதசார்பற்ற கூட்டணியின் வெற்றி மட்டுமல்ல, இந்தியா முழுமையும் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் நாம் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான அந்த முயற்சியில் முழுமையாக ஈடுபடப்போகிறோம். அதற்கு நீங்கள் (மக்கள்) பக்கபலமாக இருக்க வேண்டும், துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.