டி.வி. திருடிய தொழிலாளி கைது
ஆற்காட்டில் டி.வி. திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஆற்காட்டில் உள்ள ஒரு டி.வி. ஷோரூம் கடையில் டி.வி. வாங்குவதற்காக ஒரு வாலிபர் வந்தார். அங்கு தனக்கு தேவையான ஒரு டி.வி.யை தேர்வு செய்து பில் போடும்படி கூறியுள்ளார். பின்னர் கடையில் இருந்து வெளியே வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு டி.வி.யை திருட்டுத்தனமாக எடுத்துக்கொண்டு செல்வதற்காக தயாராக இருந்தார்.
ஏற்கனவே அந்த டி.வி.க்கு பில் போடப்பட்டு எடுக்க வந்த நபர் அங்கு டி.வி. இல்லாததால் அதிர்ச்சி அடைந்து கடை உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் டி.வி.யை எடுத்துக்கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விளாபாக்கம் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 36), கூலித் தொழிலாளியான இவர் ஆற்காடு தோப்புக்கானா பகுதியில் வசித்து வருவதும் தெரிய வந்தது
மேலும் கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது கடந்த 10 நாட்களுக்கு முன்பு வினோத் கடைக்கு வந்து டி.வி. வாங்குவது போல் நாடகமாடி கடையில் இருந்து ஏற்கனவே ஒரு டி.வி. திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசாா் வினோத்தை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 2 டி.வி.க்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.