தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை... வந்தே பாரத் உட்பட சில ரெயில்கள் ரத்து...!


தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை... வந்தே பாரத் உட்பட சில ரெயில்கள் ரத்து...!
x
தினத்தந்தி 18 Dec 2023 1:55 AM GMT (Updated: 18 Dec 2023 3:15 AM GMT)

நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி 4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதிலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரையிலும், அதிலும் ஓரிரு இடங்களில் அதி கனமழை வரையிலும் பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும் திருச்செந்தூர் - பாலக்காடு, நெல்லை - ஜாம் நகர் இடையே இயக்கப்படும் ரெயில்களும் இன்றைய தினம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில் பாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் நிஜாமுதீன் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில், முத்துநகர் நகர் மற்றும் சென்னை - திருச்செந்தூர் விரைவு ரெயில்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story