மியான்மர் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் - சீமான் வலியுறுத்தல்


மியான்மர் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் - சீமான் வலியுறுத்தல்
x

மியான்மர் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெளிநாடு வேலை என்றுகூறி அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட 15க்கும் மேற்பட்ட தமிழர்கள் மியான்மார் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் காணொலி அதிர்ச்சியளிக்கிறது. தமிழர்களை மீட்பதில் இந்திய ஒன்றியத் தூதரகம் தொடர்ந்து அலட்சியமாகச் செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற கடந்த 8 ஆண்டுகாலத்தில் அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள வறுமையைப்போக்க இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைதேடிச் செல்லும் அவலம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பன்மடங்காகப் பெருகியுள்ளது. இடைத்தரகர்கள் மூலம் இலட்சக்கணக்கில் பணத்தைச் செலுத்தி, வேலை கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் செல்லும் இளைஞர்கள் ஏமாற்றப்படும் நிகழ்வுகளும் தொடர்ச்சியாக அரங்கேறுகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வெளிநாடு வேலைகளுக்குச் செல்லும் தமிழர்கள் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுகுறித்து விசாரணை நடத்தி, போலி முகவர்களைக் கைது செய்து அவர்களது முகமைகளை முடக்கவோ, இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு வழிகாட்டவோ, உள்நாட்டிலேயே போதிய வேலை வாய்ப்பினை உருவாக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கே வேலைதேடிச் செல்லும் இளைஞர்கள் வெளிநாடுகளில் சிக்கிக்கொள்வதற்கு முக்கியக் காரணமாகும்.

ஆகவே, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மூலம் வெளிநாடு வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்கு இடைத்தரகர்கள், வேலைவாய்ப்பு முகமைகளின் நம்பகத்தன்மை, வெளிநாட்டு நிறுவனங்களின் தகவல்கள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போலி நிறுவனங்கள் குறித்து எச்சரிக்கை செய்யவும் சிறப்புத் தகவல் மையத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தொடங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தற்போது மியான்மார் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை மீட்க தூதரகம் மூலம் இந்திய ஒன்றிய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழர்கள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story