வைகை பாசனத்திற்கு பொதுப் பணித்துறையினர் பாரபட்சம்


வைகை பாசனத்திற்கு பொதுப் பணித்துறையினர் பாரபட்சம்
x
தினத்தந்தி 16 Sep 2022 6:45 PM GMT (Updated: 16 Sep 2022 6:46 PM GMT)

வைகை அணை நிரம்பியதால் இருந்த உபரிநீரை திறந்துவிடும்போது அதனை ராமநாதபுரம் கணக்கில் கழித்து வைகை பாசனத்திற்கு பொதுப்பணித்துறையினர் பாரபட்சமாக நடப்பதாக ராமநாதபுரத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக குற்றம்சாட்டினர்.

ராமநாதபுரம்


வைகை அணை நிரம்பியதால் இருந்த உபரிநீரை திறந்துவிடும்போது அதனை ராமநாதபுரம் கணக்கில் கழித்து வைகை பாசனத்திற்கு பொதுப்பணித்துறையினர் பாரபட்சமாக நடப்பதாக ராமநாதபுரத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக குற்றம்சாட்டினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன் தலைமையில் நடைபெற்றது. விவசாய இணை இயக்குனர் கண்ணையா, துணை இயக்குனர் சேக்அப்துல்லா, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களின் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:- வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணை தொடர்ந்து நிரம்பி வருகிறது. இதன்காரணமாக வைகை அணையில் இருந்துஉபரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

உபரி நீர்

உபரி நீர் திறந்துவிடப்படுவது நீர்நிலைகளை நிரப்பி கண்மாய் பாசன விவசாயம் மேற்கொள்ள உதவியாக உள்ளது ஒருபுறம் இருந்தாலும் அணை நிரம்பி வரும் உபரிநீரை வைகை பாசன கணக்கில் கழித்து உள்ளது கண்டிக்கத்தக்கது. உபரிநீரை திறந்துவிட்டு வைகை பாசன கணக்கினை தக்க வைக்காமல் ஏன் இவ்வாறு செய்தனர் என்பது புதிராக உள்ளது.

வழக்கமாக வைகை கணக்கில் 2 ஆயிரத்து 800 மில்லியன் கனஅடி இல்லாதபோது பெரியாறு கணக்கில் இருந்து ஆயிரம் மில்லியன் கனஅடி கடன் வாங்கி பயன்படுத்திக்கொண்டு வைகை கணக்கில் தண்ணீர் சேரும்போது வழங்குவது வழக்கம். இதுதான் நடைமுறை. அதேபோல, வைகை கணக்கில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது என்பது விவசாயிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைத்த பின்னர் தான் திறந்துவிடப்படும்.

உத்தரவு

களிமண் 21 அடியாக உள்ளதால் அதனை வைகை அணை, பெரியாறு அணை கணக்கில் சரிசமமாக கழிக்க வேண்டும். இதுதான் ஆண்டாண்டு கால நடைமுறை விதிமுறையும் அதுதான்.

அதனைமீறி மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக பெரியாறு கணக்கில் கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்க வேண்டும் என்ற பாரபட்ச நோக்கத்தில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தையோ விவசாயிகளையோ கலந்தாலோசிக்காமல் எங்கள் கணக்கில் இருந்து திறந்துவிட்டதாக கூறுவது எந்தவகையில் நியாயம். இதுபோக ஆயிரத்து 354 மில்லியன் கனஅடி நீர் சேர்ந்தாலே வைகை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடலாம் என்ற உத்தரவு 2 ஆயிரத்து 800 மில்லியன் கனஅடி என்ற வைகை பாசன உரிமையை பறித்துள்ளனர்.

கண்டனம்

இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம். மதுரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெரியாறு பாசன விவசாயிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வைகை பாசன விவசாயத்தை ஒரு பாசனமாகவே மதிப்பதில்லை. இதுதான் உண்மை.

இதனை நிரூபிக்கும் வகையில்தான் தற்போதும் நடந்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஒட்டு மொத்த விவசாயிகளும் குரல் எழுப்பி கண்டனம் தெரிவித ்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக சிறப்பு கூட்டம் நடத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து விரிவாக விவாதித்து விவசாயிகளின் உணர்வுக்கு மதிப்பளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story