செய்தியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்


செய்தியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
x

தமிழக அரசு தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு, குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் - பல்லடம் வட்டத்தைச் சார்ந்த நேசபிரபு என்பவர் நியூஸ்-7 தொலைக்காட்சியின் செய்தியாளராக பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு அவர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

பரபரப்பான சூழ்நிலையில், கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசும் விரைந்து செயல்பட்டு இரண்டு பேரைக் கைது செய்து விசாரித்து வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட நேச பிரபுவுக்கு மூன்று இலட்ச ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறார்.

தமிழக அரசு தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு, குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்குமாறும், செய்தியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story