வாளவாடிக்கு முறையாக இயக்கப்படாத அரசு பஸ்கள்


வாளவாடிக்கு முறையாக இயக்கப்படாத அரசு பஸ்கள்
x
தினத்தந்தி 27 Jun 2023 3:50 PM GMT (Updated: 28 Jun 2023 8:36 AM GMT)

மாவட்ட நிர்வாகம் வாளவாடி பகுதிக்கு பழையபடி சீரான முறையில் பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

ஏழை-எளிய பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்கள் இன்றளவும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் சென்று அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு அரசு பஸ் போக்குவரத்தையே பெரிதும் நம்பி உள்ளனர். ஆனால் உடுமலை கிளையில் இருந்து வாளவாடி பகுதிக்கு போதிய அளவில் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் முன் வருவதில்லை. வழித்தட எண் 13 கொண்ட பஸ் மதியம் ஒரு மணியளவில் வாளவாடியில் இருந்து புறப்பட்டு உடுமலைக்கு சென்றால் மீண்டும் மாலை வரையில் திரும்பி வருவதில்லை. அதே போன்று வழித்தடம் எண் 19 கொண்ட பஸ் காலை 10.30 மணியளவில் வாளவாடியில் இருந்து உடுமலைக்கு சென்றால் மீண்டும் மாலை 3.45 மணிக்கு தான் வாளவாடிக்கு வருகிறது.

இடைப்பட்ட நேரத்தில் பஸ்கள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்படுகிறது. வேண்டுமென்றே அதிகாரிகள் பஸ்களை இயக்காமல் வாளவாடி பகுதியை புறக்கணித்து வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் வாளவாடிக்கு வருவதற்கு உடுமலை மத்திய பஸ் நிலையத்திலும் வாளவாடியில் இருந்து உடுமலை செல்வதற்கு வாளவாடி பஸ் நிலையத்திலும் பஸ்சை எதிர்பார்த்து கால் கடுக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் வாளவாடி பகுதிக்கு பழையபடி சீரான முறையில் பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story